MENU
Murasu Anjal 10 Launched PDF Print E-mail
Saturday, 13 March 2010 06:33

 

முரசு அஞ்சல் 10ஆவது பதிப்பு

விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ்-7 மற்றும் மெக்கிண்டாஷ் கணினிகளில் இயங்க வல்ல மலேசியப் படைப்பு.

கோலாலம்பூர் 14 மார்ச்சு. 1985ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் மலேசியத் தயாரிப்பான முரசு அஞ்சல் எனும் தமிழ்ச் செயலி புத்தம் புதிய செயல்பாடுகளுடன் பத்தாவது பதிப்பாக மலேசியாவில் இன்று வெளியீடு காண்கின்றது.

“கணினியில் தமிழ் தோன்றுவதே ஒரு சாதனையாக இருந்த காலம் கடந்து இப்போது மின்-அஞ்சல், இணையம், வலைப்பூக்கள் (பிளாக்), ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற செயல்பாடுகளுக்கெல்லாம் தமிழ்ச் செயலிகள் எந்தவித தடையும் இன்றி உதவ வேண்டும் என்ற  எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கிறது.  இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யவதோடு எதிர்பாராத செயல்பாடுகளையும் சேர்த்து வருகிறது முரசு அஞ்சல் 10” என்று முரசு கம்யூனிகேஷன்ஸ் நிருவனத்தின் தலைமைச் செயலதிகாரி திரு ஜெயசுப்பிரமணியம் நாராயணன் கூறினார்.

“முழுக்க முழுக்க யூனிகோட் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தப் பதிப்பு நவீன இயங்கு தளங்களான விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ்-7ழோடு மட்டும் இல்லாமல் மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயங்கக் கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய தளமான விண்டோஸ் எக்ஸ்பி-யிலும் இயங்கும் இந்தச் செயலி, ஆவண மாற்றம், பி.டி.எஃப் (PDF) உருவாக்கம் முதலிய வசதிகளோடு நின்றுவிடாமல் முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியையும் சேர்த்துள்ளது. ” என்று திரு ஜெயசுப்பிரமணியம் மேலும் கூறினார்.

லிப்கோ தமிழ்ப் பேரகராதி

“முரசு அஞ்சல் நிருவணம் பல சாதனைப் படைப்புகளைத் தமிழ் உலகத்துக்குத் தந்துள்ளதை நாம் அறிவோம். தமிழை பிழையின்றி கணினியில் எழுதவும், நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குறியது. கணினியில் எழுதும்போதே சொற்களின் பொருளைத் தெரிந்துகொளும் வசதியை தமிழுக்கு முதன்முதலில் கொடுத்த மென்பொருள் முரசு அஞ்சல் தான். அவர்களோடு பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!” என்று தமிழ் நாட்டில் உள்ள எண்பத்திரண்டு ஆண்டுகளான லிப்கோ நிருவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தி. ந. ச. வீரராகவன்  கூறினார்.

மலேசியப் பதிப்புத் துறையின் அடையாளத்தையே மாற்றியது முரசு அஞ்சல் தான் என்று கூறினால் அது மிகையாகாது. 25ஆண்டுகளாக பல கணினிகளிலும் கருவிகளிலும் தமிழைத் தடையின்றி தவழ வைத்த பெருமை முரசு அஞ்சலுக்கு உண்டு. அதை நினைவு கூர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான முத்து நெடுமாறன் “கணினியோடு தமிழின் புழக்கம் நின்றுவிட்டால் எனது நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கொள்ள முடியாது. கணினிகள் இப்போது கைகளுக்குள் அடங்கி விட்டன, கைப்பேசிகளோ கணினியோடு போட்டிப் போடுகின்றன. இவை அனைத்தும் தமிழ் பேசவேண்டும் - அதுவும் நல்ல தமிழ் பேச வேண்டும். அதுவே எமது கனவு. அந்தக் கனவு நிறைவேறி வருகிறது. அப்படி வரும் வழியில் முரசு அஞ்சல் 10 ஒரு மையில் கல்” என்று கூறினார்.

முரசு அஞ்சல் 10 மார்ச் 14ஆம் நாள் முதல் மலேசிய சந்தைக்கு வருகிறது. வசதிகள் கூடினாலும் விலையில் குறைந்துள்ளது இந்தப் பத்தாம் பதிப்பு. தனி நபர்களின் சொந்தப் பயனுக்கு இதன் விலை 100 ரிங்கிட் மட்டுமே.

இதனைப் பெற்றுக் கொள்வதற்கு இணைய வசதி தேவைப் படும். மேலும் விவரங்களை http://anjal.net இணைய முகவரியில் காணலாம். தொடர்புக்கு 03-23811141.


 

Last Updated on Thursday, 12 August 2010 09:35